இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மெய்தேய் தலைவர் கைது - வெடித்தது போராட்டம் - இணைய சேவைகள் முடக்கம்

Published On 2025-06-08 06:37 IST   |   Update On 2025-06-08 06:44:00 IST
  • மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது.
  • ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் நடுவில் டயர்களை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2023 இல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News