இந்தியா

காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை: பிரியங்கா காந்திக்கு இஸ்ரேல் தூதர் பதிலடி

Published On 2025-08-12 20:17 IST   |   Update On 2025-08-12 20:17:00 IST
  • காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.
  • இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது என தெரிவித்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, இன்று தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்துவருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார்.

அவரது பதிவில், வெட்கக்கேடானது உங்கள் வஞ்சகம். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாசின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்வதன் மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை என தெரிவித்தார்.

இதேபோல், அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News