இந்தியா

பிரதமர் மோடி 

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்

Published On 2022-06-25 21:55 GMT   |   Update On 2022-06-25 21:55 GMT
  • ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
  • ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திக்க இருக்கிறேன்.

ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஜெர்மனியில் தொடங்குகிறது. தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மா லில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்று கொண்ட மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit.

முன்னதாக பிரதமர் தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

முக்கிய சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து நான் கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளேன்.

உச்சிமாநாட்டின் இடையே ஜி-7 மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ஜெர்மனியில் தங்கியிருக்கும் போது, ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்க உள்ளேன்.

இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28ந் தேதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News