வரும் 25ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடி 161 அடி உயர கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றுகிறார்.
- சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோவிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25ம் தேதி காவிக்கொடியை ஏற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென்படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விவாக பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன் பிறகு விருந்தினர்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும்.
பாதுகாப்புக் கருதி அன்றைய நாளில் பொது மக்களுக்காக வழக்கமான தரிசனம் இருக்காது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக் கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது. உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும். முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் கோவிலின் அனைத்து 7 கோபுரங்களிலும் முதன்முறையாக காவிக்கொடிகள் பறக்கும் என்று கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
இதையடுத்து அயோத்தி நகரம் முழுவதும் காவிக் கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
சாலைகள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சரயுநதி படித்துறைகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.