இந்தியா

"அதானி குழுமத்தின் வாழ்நாள் சிறந்த ஊழியருக்கான விருது வென்ற பிரதமர் மோடி" - காங்கிரஸ் கிண்டல்

Published On 2025-10-09 17:21 IST   |   Update On 2025-10-09 17:21:00 IST
  • 19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
  • அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது

மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து 1,160 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விமான நிலையம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான அரசு திட்டங்களின் டெண்டர்கள் அதானிக்கு வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. தாராவி மறுக்கட்டுமான திட்டம், பழங்குடியினர் மற்றும் சுற்றுசூலை பாதிக்கும் என விமர்சனத்துக்குள்ளாகும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உள்ளிட்டவை அதானி குழுமம் வசம் செல்வதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது.

மேலும் அண்மையில் அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது அதானிக்கு நிவாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News