மக்களவையில் இரண்டு நாட்கள் அரசியல்சாசனம் மீதான விவாதம்: சனிக்கிழமை பிரதமர் மோடி பதில்
- வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும்.
- மாநிலங்களவையில் அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும்.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
அதானி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் அவை நடவடிக்கை முழுமையாக செயல்படாமல் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் அவைகள் ஒத்திவைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியல்சாசனம் (Constitution) மீதான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளும், என்.டி.ஏ. அரசும் சம்மதித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி (வெள்ளி மற்றும் சனி) ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும். சனிக்கிழமை பிரதமர் மோடி விவாத்தின் மீது பதில் அளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் 16 மற்றும் 17 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி பதில் அளிக்க இருக்கிறார்.
மக்களவையில் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை விவாதத்தை தொடங்குவார். மாநிலங்களவையில் திங்கட்கிழமை அமித் ஷா விவாதத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.