இந்தியா
null

'ஆபரேஷன் சிந்தூர்' இந்தியாவின் வலிமையை உலகுக்கு காட்டியது - பிரதமர் மோடி

Published On 2025-05-22 14:20 IST   |   Update On 2025-05-22 14:23:00 IST
  • காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது.
  • இந்தியர்கள் சிந்திய ரத்தத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

பிகானேர்:

இந்தியா முழுவதும் 103 ரெயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளுடன் ரூ.1,100 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த ரெயில் நிலையங்களில் நுழைவு வாசல் மற்றும் வெளியேறும் வாசல் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம், போளூர், குளித்துறை ஆகிய 9 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைத்து மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த 103 ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பிகானேரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.26 ஆயிரம் கோடி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பிறகு அந்த மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று கர்ன மாதாவை வழிபட்டு ஆசிகளை பெற்றேன். அவரது அருளால் வளர்ச்சி பாரதத்தை உருவாக்கும் நமது தீர்மானம் இன்னும் வலுவடையும். இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்காக நாட்டில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மிகப்பெரிய முயற்சி நடந்து வருகிறது. உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்பை விட 6 மடங்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. ரெயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத், அமிர்த பாரத் மற்றும் நமோ பாரத் ரெயில்கள் நாட்டின் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கின்றன. 1300-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் ஒரே நேரத்தில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சாலைகள், ரெயில்கள், நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக இருக்க வேண்டும். இதற்காக கடந்த 11 ஆண்டுகளில் முன்னெப போதும் இல்லாத வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியை உலகமே வியப்பு அடைந்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. இதற்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவம் தாக்குதல் நடவடிக்கை எடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அவர்கள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தனர். பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினர். இதில் அவர்களை மண்டியிட வைத்தது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நமது கோபத்தின் அடையாளம் மட்டுமல்ல புதிய இந்தியாவின் அடையாளமும் ஆகும். இது நீதியின் புதிய கோட்பாடு திகழ்கிறது.

இந்த பதிலடி நடவடிக்கையில் இந்தியாவின் வலிமையை உலகமே பார்த்தது.

ஆபரேஷன் சிந்தூரில் 3 புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தண்டிக்கபடாமல் போகாது, அணு ஆயுத மிரட்டல்கள் வேலை செய்யாது, பயங்கரவாதத் தலைவர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள் தான் என்பதாகும்.

இந்தியாவின் விமானப்படை தளங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்திய ஆயுதப்படைகள் தாக்கின. பாகிஸ்தானின் ரகீம் யார் கான் விமானப் படை தளம் ஐ.சி.யூ.வில் (தீவிர சிகிச்சை பிரிவில்) உள்ளது. இந்தியர்கள் சிந்திய ரத்தத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

சிந்தூரை துடைக்க புறப்பட்டவர்கள் தூசியாக மாறிவிட்டனர். என் நரம்புகளில் ரத்தம் அல்ல சிந்தூர் ஓடுகிறது.

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சுவார்த்தையோ இருக்காது; பேச்சுவார்த்தை என்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவமும் அதன் பொருளாதாரமும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெற முடியாது, இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News