நடுவானில் விமானம் குலுங்கியது மரண அனுபவத்துக்கு நெருக்கமாக இருந்தது: திரிணாமுல் எம்.பி.
- விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
ஸ்ரீநகர்:
தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:
அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.
அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.