இந்தியா

விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருடன் நாடு துணையாக நிற்கும்: அமித்ஷா பேட்டி

Published On 2025-06-12 22:26 IST   |   Update On 2025-06-12 22:26:00 IST
  • மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

அகமதாபாத்:

ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்தில் சிக்கியது. அதில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒன்றாக நிற்கிறது.

விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. குஜராத் முதல் மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மந்திரியை நான் தொடர்பு கொண்டேன். சிறிது நேரத்திலேயே பிரதமரும் அழைத்தார்.

அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் இருந்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளது நல்ல செய்தி. டிஎன்ஏ சரிபார்ப்புக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படும். உயிர் பிழைத்த ஒருவரை நான் சந்தித்தேன்.

ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை.

நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சோதனைகளுக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். மறுஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டது. விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து மந்திரி அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News