வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு
- வந்தாரா குஜராத்தின் ஜாம்நகரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
- சிங்கம், சிறுத்தை, யானை உள்பட 43 வகையான 2000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன.
புதுடெல்லி:
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நடத்தி வரும் 'வந்தாரா' அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
பிரதமர் மோடி 2024-ல் இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.
இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.
இதற்கிடையே, வந்தாரா உலகின் மிகப்பெரிய விலங்கு கடத்தல் மையமாக இருக்கலாம் என சில அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜெய சுகின் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு மறுவாழ்வு என்ற பெயரில் வந்தாரா மையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி சுதந்திரமாக விடுவிக்க வேண்டும். வந்தாராவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும். ஏற்கனவே திரிபுரா ஐகோர்ட் அமைத்த வந்தாரா விசாரணைக் குழுவை கலைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.