இந்தியா

தேசிய கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு

Published On 2023-11-10 14:18 GMT   |   Update On 2023-11-10 14:18 GMT
  • பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கலானது
  • வெற்றி வாய்ப்பை மனதில் வைத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்

இந்தியாவில், இம்மாதம் 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களையே களத்தில் இறங்கியுள்ளனர்.

அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. இவற்றில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளின் பட்டியல்களில் ஆண்களே பெரும்பான்மை வகிக்கின்றனர்.

சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் முதல் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெண் வேட்பாளர்களுக்கு கட்டாயம் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இரண்டு தேசிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 679 சட்டசபை தொகுதிகளுக்கு, பா.ஜ.க. 643 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 666 வேட்பாளர்களையும்  களம் இறக்கியுள்ளன.

போட்டியில் களம் இறங்கி உள்ள இந்த வேட்பாளர்களில் பா.ஜ.க. 80 சார்பில் பெண் வேட்பாளர்களும்,  காங்கிரஸ் கட்சி சார்பில் 74 பெண் வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

நாரி ஷக்தி வந்தன் அதிநியம் (Nari Shakti Vandan Adhiniyam) எனும் பெயரில் பா.ஜ.க. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தது. பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு தங்கள் கட்சிதான் முதலில் பாடுபட்டதாகவும் தங்கள் முயற்சியில் பா.ஜ.க. நற்பெயர் வாங்கி கொள்ள முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வந்தது.

ஆனால், இரண்டு கட்சிகளுமே வெற்றி வாய்ப்பை மனதில் வைத்துத்தான் வேட்பாளர் தேர்வை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுமே பரஸ்பர விமர்சனத்தையும் தவிர்த்து விட்டதை சுட்டி காட்டும் பெண்ணுரிமை ஆர்வலர்கள், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசியல் கட்சிகள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News