எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே எச்சரிக்கை
- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
- இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால், மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, பிரதமர் மோடியை எச்சரித்துள்ளார்.
கர்காடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது கார்கே கூறியதாவது:-
சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி பயங்கரவாதிகளை அழித்தது இந்திய படைகள்.
ஒட்டுமொத்த நாடும், இந்திய படைகளும் நாட்டை பாதுகாக்க ஒற்றுமையாக இருந்த நிலையில், சில தனி நபர்கள், தனிப்பட்ட ஆதாயத்தை பெற முயற்சி செய்தார்கள்.
அவர்கள் ராணுவத்தில் கேப்டன், கர்னல் அல்லது லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றியிருந்தால், நாட்டிற்காக சிறப்பாகப் போராடியதற்காகவும், சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் நாம் அவர்களைப் பாராட்டியிருப்போம். ஆனால் அது அப்படியல்ல.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அதற்குப் பதிலாக பீகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிசியாக இருந்தார். இதற்கு அர்த்தம் என்ன?. நாட்டு மக்களும், வீரர்களும் ஒருபக்கம் போரிட்டு கொண்டிருக்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிறகு, மறுபக்கம் பிரதமர் பிரசாரத்தை தேர்வு செய்துள்ளார்.
நீங்கள் எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால் தலைவர்கள், மக்கள், குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அமெரிக்க தேர்தல்களின்போது மோடி 'பிர் ஏக் பார் டிரம்ப் சர்க்கார் (Phir Ek Baar Trump Sarkar)' என்ற முழக்கத்தை எழுப்பினார். இந்த பெரிய மனிதர் (பிரதமர் மோடி) அமெரிக்காவில் இதைச் சொன்னார். ஆனால் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தார். பிரதமர் மோடி அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.