தீப்பிழம்பில் இருந்து வெளியே நடந்து வந்த பயணி.. பதறடிக்கும் விமான விபத்தின் புதிய வீடியோ
- விமானம் மோதிய கட்டிடத்திலிருந்து நடந்து செல்லும் போது, அவருக்குப் பின்னால் ஒரு தீப்பிழம்பு எழுவதும் தெரிகிறது.
- மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்தேன், ஆனால் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா 171 விமான விபத்தில், 270 பேர் உயிரிழந்த நிலையில், விஸ்வாஸ் குமார் ரமேஷ் (38) என்ற இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் குடிமகன் மட்டுமே அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, விஸ்வாஸ் குமார் பலத்த காயங்கள் இல்லாமல் ஆம்புலன்ஸை நோக்கி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், விபத்துக்குப் பிந்தைய புதிய வீடியோவில், அவர் கையில் தொலைபேசியுடன் விமானம் மோதிய கட்டிடத்திலிருந்து நடந்து செல்லும் போது, அவருக்குப் பின்னால் ஒரு தீப்பிழம்பு எழுவதும் தெரிகிறது.
அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து விஸ்வாஸ் குமார் கூறுகையில், " விபத்தின்போது நான் அமர்ந்திருந்த 11A அவசரகால வெளியேற்றத்திற்கு அருகிலிருந்த இருக்கை உடைந்தது. மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்தேன், ஆனால் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. விமானத்தில் ஒரு இடைவெளியைக் கண்டு, அதன் வழியாக ஊர்ந்து வெளியே வந்தேன்" என்றார்.
சுற்றி சடலங்கள் சிதறிக்கிடந்த அந்த பயங்கரமான காட்சியிலிருந்து, யாரோ தன்னை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நினைவு கூர்ந்தார்.