மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்- காஷ்மீரின் எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல்
- பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது.
- இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது நாட்டுக்குள் இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது.
பாகிஸ்தான் இத்தகைய செயலில் ஈடுபடும் என்று ஏற்கனவே இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.