திருடன் அவனுடைய திருட்டை விசாரிக்க முடியுமா?: பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்
- அவர்கள் (பாகிஸ்தான்) என்ன விசாரணை செய்வார்கள்?
- பாகிஸ்தான் பிரதமர் பயத்தில் இதைச் சொல்கிறார். இந்தப் பயம் நல்லது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி போடுகிறது. நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சரும், மேற்க வங்க மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் கூறியதாவது:-
அவர்கள் (பாகிஸ்தான்) என்ன விசாரணை செய்வார்கள்? ஒரு திருடன் தனது சொந்த திருட்டை எப்போதாவது விசாரிக்க முடியுமா?. பாகிஸ்தான் பிரதமர் பயத்தில் இதைச் சொல்கிறார். இந்தப் பயம் நல்லது. அவருக்கு இந்தப் பயம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் தயாராக இல்லாதபோது, அவர்களைத் தாக்குவோம், அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம்.
இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.