இந்தியா

பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை- தயார் நிலையில் போர் விமானங்கள்

Published On 2025-04-30 11:04 IST   |   Update On 2025-04-30 11:04:00 IST
  • இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

சுற்றுலா பயணிகளை பிணைக் கைதிகள் போல பிடித்துக் கொண்டு அவர்களது மாநிலம், மதம் ஆகியவற்றை கேட்டறிந்து மிக கொடூரமாக 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பஹல்காமில் நடந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்த தகவல்கள் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை அதிரடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அடுத்தக்கட்டமாக கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி தூதரக அளவிலும் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா குறி வைத்துள்ளது.

அப்போது நடத்தப்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் தரப்பில் கடும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ் நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப் படை தலைமை தளபதி அமர் பிரீத்சிங் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்பு படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவே இந்திய போர் விமானங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

எந்த எதிர்ப்பு எந்த திசையில் இருந்து வந்தாலும் அவற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடமண்டலத்தில் இந்திய போர் விமானங்கள் இன்று காலை முழு வீச்சில் தயார்ப்படுத்தப்பட்டன.

இன்று பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய மந்திரி சபை கூட்டம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரவை குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடந்தன.

இந்த கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்தி உள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இறுதிக்கட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.

மத்திய அமைச்சரவையின் கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா தரப்பில் தீவிரவாதிகள் மீது பலமுனை தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா நடத்தப்போகும் தாக்குதலுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. என்றாலும் இந்தியாவின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அருகே நெருங்கி வருவதால் பாகிஸ்தான் மந்திரிகள் அலற தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவஜா சமீபத்தில் பேசுகையில், "இந்தியா தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய போர் வெடிக்கும்" என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தித் துறை மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியா அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் தயாராகி விட்டதை உணர முடிகிறது. இந்த போரால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இந்தியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தீவிரவாதத்தை நாங்கள் தூண்டி விடவில்லை. உண்மையில் தீவிரவாதத்தால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி அதுல்லா சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பதட்டம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News