பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம்
- பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார்.
- பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை.
புதுடெல்லி :
காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க.வின் தேர்தல் இலக்கு திட்டங்களாக இருந்து வந்தது.
இவற்றில் முதல் இலக்கை நிறைவேற்றி விட்டது. இரண்டாவது இலக்கை நிறைவேற்றி வருகிறது. மூன்றாவது இலக்கான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில்தான் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
அடுத்த சில மாதங்களில் நாடு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் 21-வது மத்திய சட்டக்கமிஷன், இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், "2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது, பொது சிவில் சட்டம் அவசியம்" என ஆணித்தரமாக குறிப்பிட்டது, பெரும் அதிர்வுகளை அரசியல் அரங்கில் உருவாக்கி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து வெளியிட்ட மரியாதைக்குரிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக அர்த்தப்படுத்தினால், அவரது ஒப்பீடு உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை மிகவும் மாறுப்பட்டது.
குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு, அரசியல், சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில்கூட பன்முகத்தன்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை. அதை ஒரு செயல் திட்டத்தால் நாட்டை வழிநடத்தும் பெரும்பான்மை அரசால், மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஒரு எளிதான நடவடிக்கை என்பது போல பிரதமர் அதை தோன்றச்செய்துள்ளார். அவர் கடந்த சட்டக்கமிஷன் அறிக்கையில், "இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல" என்று கூறி இருப்பதை வாசிக்க வேண்டும்.
நாடு தற்போது பா.ஜ.க.வின் வார்த்தைகளாலும், செயல்களாலும் பிளவுபட்டுள்ளது. பொதுமக்களிடம் பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தி விடும்.
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதன் நோக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
நல்லாட்சி தருவதில் தோல்வி கண்டுவிட்டு, பா.ஜ.க. இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை களம் இறக்குகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.