இந்தியா

சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்- நிபா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை

Published On 2023-09-18 11:37 GMT   |   Update On 2023-09-19 09:00 GMT
  • பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர்.
  • ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து வந்து செல்வார்கள். அது மட்டுமின்றி மாதாந்திர பூஜை காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். அதன்படி தமிழ் மாதமான புரட்டாசி மாதம் மற்றும் மலையாள மாதமான கன்னி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது.

ஐயப்பன்கோவிலில் நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் இன்று முதல் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகங்கள் மற்றும் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. காலையில் உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை நடந்தது. காலை 5.30 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

பொதுவாக புரட்டாசி மாதத்தில் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். அதேபோன்று தற்போதும் சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றே குவிந்தனர். இதனால் பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்திருந்தது.

கொரோனா காலத்திற்கு பிறகே சபரிமலையில் தற்போது வரை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பம்பை மற்றும் நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் செயல்பட்டன.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் சபரிமலை வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இதனால் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வழக்கம்போல் சபரிமலைக்கு வந்து செல்லலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News