உமர் அப்துல்லா அரசு டெல்லியிடம் சரணடைந்து விட்டது: மெகபூபா முஃப்தி விமர்சனம்
- புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
- உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-
புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.