மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கியது NIA நீதிமன்றம்
- 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
- நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.
கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.
சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.