பீகார் சட்டமன்ற தேர்தல்: NDA தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது
- பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
- ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.