இந்தியா

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு

Published On 2022-06-15 17:54 IST   |   Update On 2022-06-15 17:54:00 IST
  • டெல்லியில் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
  • ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டு

நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இன்றும் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது டெல்லி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடத்திவரும் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.



'தலைவர் ராகுல் காந்தியை கடந்த இரண்டு நாட்களாக பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்காக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கொடூரமாக தாக்கி கைது செய்து வருகின்றனர்' என்றும் விஜய் வசந்த் கூறி உள்ளார்.

Tags:    

Similar News