பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல்- மும்பையில் வாலிபர் கைது
- பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மும்பை:
பிரதமர் நரேந்திரமோடி பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்தது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி செம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 11-ந்தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு போலீசார் மற்ற விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையை நடத்தியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.