null
அதானியை காப்பாற்ற LIC-யின் ரூ.33,000 கோடியை தாரைவார்க்கும் மோடி அரசு - வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையால் பரபரப்பு
- ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
- நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகை குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றை வாஷிங்கடன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்தது.
மேலும் அதானியும் அவரது கூட்டாளிகளும் பல பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது. இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்கும்.
இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முந்தைய ஆண்டை விட கடன் 20% அதிகரித்தது. இதனால் சர்வதேச வங்கிகள் கடன் கொடுக்க தயங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை வாங்க தயங்கினர்.
இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனமான LIC பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும்.
ஆனால் அதானி குழுமம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. LIC பல கார்ப்பரேட் குழுமங்களில் முதலீடு செய்கிறது, அதானிக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுவதாகக் கூறுவது தவறானது என்பதே அக்குழுமத்தின் வாதமாக உள்ளது.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தில் LIC-யின் அதிகப்படியான முதலீடு குறித்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.