ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
- ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (பிப்ரவரி 3) முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும்.
தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.