இந்தியா

கல்வி முறையை இரக்கமின்றி அழித்து வணிகமயமாக்கும் மோடி அரசு - NEP பற்றி எச்சரிக்கும் சோனியா காந்தி!

Published On 2025-03-31 20:27 IST   |   Update On 2025-03-31 20:34:00 IST
  • சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
  • பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த 2019 இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை (NEP) விவாதப்பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை குறித்த கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.

கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (centralisation of power, commercialisation, and communalisation)' ஆகியவற்றுக்கான கருவியாக, கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

செய்தி இதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம், கல்வியில் தமது மூன்று முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே அரசு தீவிரமாக இருப்பதை காண முடிகிறது.

"மத்திய அரசுடன் அதிகாரத்தை மையப்படுத்துதல்; கல்வியில் முதலீடுகளை வணிகமயமாக்குதல் மற்றும் தனியார் துறைக்கு அவுட்சோர்சிங் செய்தல், மற்றும் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் கல்வி நிறுவங்களில் வகுப்புவாதத்தை திணித்தல்" ஆகிய கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களைக் கொண்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 2019க்குப் பிறகு ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (RTE) சட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி உதவியின் ஒரு பகுதியாக சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதி பல ஆண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான மானியங்களை நிறுத்தி வைத்து , PM-SHRI திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. SSA நிதியை மத்திய அரசு ஒதுக்கிட பாராளுமன்ற நிலைக்குழுவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

 

உயர்கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வரைவு உருவாக்கப்பட்டது. இது துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளின் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் - மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஏகபோக அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது கூட்டாட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 மேலும் பள்ளிக்கல்வியை தனியார்மயமாக்கலை நோக்கி மத்திய அரசு நகர்த்தி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல், சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி NEP உடைய பின்விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கடன் வாங்கும் சூழலுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் தள்ளியிருப்பதாகத் தெரிவித்த அவர், இதன்மூலம் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் உயர்ந்துள்ளாககுறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அரசாங்கம் கல்வி முறை மூலம் வகுப்புவாத வெறுப்பைப் போதித்து வளர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் முகலாய வரலாறு பற்றிய குறிப்புகளை நீக்கிய NCERT பாடப்புத்தகங்களில் திருத்தங்களை அவர் மேற்கோள் காட்டியா அவர், கல்வித் தகுதியை விட கருத்தியல் பரிசீலனைகளின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்துவதை விமர்சித்தார்.

 

முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகள், தங்கள் சித்தாந்தங்களுக்கு வளைந்து கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இது பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கான தகுதிகளை நீர்த்துப்போகச் செய்துள்ளதாகச் சாடினார்.

இந்தியாவின் பொது கல்வி அமைப்பை இரக்கமின்றி அழிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகவும், கடந்த பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.

கல்விக் கொள்கை வகுக்கப்படும்போது கல்வியின் தரத்தை குறித்து கண்டுகொள்வதேயில்லை என்பதும் தெளிவாகிறது என்று சோனியா காந்தி கடுமையான விமர்சனங்களைத் தனது கட்டுரையில் முன்வைத்துள்ளார். 

Tags:    

Similar News