இளம் பெண்ணிடம் பேசியதால், வாலிபரை அடித்துக் கொன்ற கும்பல்: மகாராஷ்டிராவில் கொடூரம்
- போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வாலிபர், இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.
- அப்போது வந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக புகார் அளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.