இந்தியா

மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து நீக்கியது பாராளுமன்ற ஜனநாயக துரோகம்- மம்தா

Published On 2023-12-08 11:42 GMT   |   Update On 2023-12-08 11:42 GMT
  • மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
  • சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கைக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வெறியேற்றியது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு நடந்த துரோகம். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் நிற்கிறது. பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் எங்களை தோற்கடிக்க முடியாது. இது ஒரு சோகமான நாள்.

மொய்த்ரா தனது நிலைப்பாட்டை விளக்கக்கூட பாஜக அனுமதிக்கவில்லை.

மொய்த்ரா ஒரு பெரிய ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு திரும்புவார். தங்களுக்கு பெரிதளவில் பெரும்பான்மை இருப்பதால் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜக நினைக்கிறது. அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News