இந்தியா

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச படங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்- மத்திய அரசு

Published On 2026-02-11 07:11 IST   |   Update On 2026-02-11 07:11:00 IST
  • செயற்கை நுண்ணறிவு என்னும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.
  • புதிய விதிகள் வரும் 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி:

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஏ.ஐ., டீப்பேக் மூலமாக தயாரிக்கப்படும் ஆபாச படங்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்னும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலமாக உருவாக்கப்படும் சட்டவிரோதம், ஏமாற்றும் தன்மை கொண்டது, பாலியல் சுரண்டல், அனுமதியில்லா உள்ளடக்கம், போலி ஆவணங்கள், குழந்தை பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கம், வெடிகுண்டுகள், ஆள்மாறாட்டம் போன்றவற்றுடன் தொடர்புடைய படங்கள்,வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி வேகமாக பரவுகின்றன.

இதனை தடுக்க மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியாகி உள்ளநிலையில் அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் மற்றும் டீப்பேக் போன்ற உள்ளடக்கங்களை கையாள்வதில் ஆன்லைன் தளங்களுக்கு அரசு கூடுதல், கடுமையான பொறுப்புகளை விதித்துள்ளது. அதன்படி எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில், தகுதியான அதிகாரிகள் அல்லது நீதிமன்றங்கள் குறியிடும் செயற்கை உள்ளடக்கங்களை 3 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ல் செய்யப்பட்ட திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. இவ்விதிகளில், ஏ.ஐ. மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு முதன்முறையாக தெளிவான வரையறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் வரும் 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழில் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர் புகார் தீர்வு தொடர்பான காலக்கெடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News