இந்தியா

செல்போன் ஸ்கிரீன் கார்டில் சிக்கி தவித்த குட்டி பாம்பு- பசையில் இருந்து போராடி மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது

Published On 2026-02-11 11:43 IST   |   Update On 2026-02-11 11:43:00 IST
  • தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
  • பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் ஒரு செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் செல்போன்களுக்கு தேவையான ஸ்கிரீன் கார்டு உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர், தனது செல்போனுக்கு ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்கு சென்றார். அப்போது கடை ஊழியர் ஸ்கிரீன் கார்டுகள் வைக்கப்பட்டிருந்த மேசை டிராயரை திறந்தார். அப்போது உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு உயிருடன் கிடந்தது.

அந்த பாம்பு அங்கிருந்த ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி அசைய முடியாமல் கிடந்தது. இதனை பார்த்த கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து தளிப்பரம்பாவில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் பாம்பு இருந்த செல்பேன் கடைக்கு வனத்துறையினர் வந்தனர். அவர்களுடன் பாம்பு பிடிப்பவர் ஒருவரும் வந்தார். அவர் செல்போன் ஸ்கிரீன் கார்டில் சிக்கியிருந்த குட்டி பாம்பை காயமடைந்து விடாமல் மீட்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் பாம்பின் உடல் நன்கு ஒட்டியிருந்ததால் அதிலிருந்து பாம்பை பிரித்து எடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பாம்பு, அது சிக்கியிருந்த செல்போன் ஸ்கிரீன் கார்டுடன் தளிப்பரம்பா வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து மிகவும் கவனமாக பிரிக்கப்பட்டதால், பாம்புக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினர், காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி பாம்பை காப்பாற்ற வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

Tags:    

Similar News