மகாராஷ்டிராவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 26 பயணிகள் உடல் கருகி பலி
- பயணம் செய்த 33 பேரில் 26 பேர் உடல் கருகி பலி
- 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை பஸ் விபத்தில சிக்கி 26 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றது. அம்மாநிலத்தை உலுக்கும் வகையில் நடந்துள்ள விபத்தின் விவரம் வருமாறு:-
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு நேற்று மாலை பயணிகள் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. தனியாருக்கு சொந்தமான இந்த சொகுசு பஸ்சில் 33 பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் அந்த சொகுசு பஸ் சம்ருத்தி-மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. புல்தானா என்ற இடத்தில் அந்த பஸ் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய அந்த பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கம்பத்திலும், சாலை நடுவில் உள்ள தடுப்பிலும் அடுத்தடுத்து மோதியதால் உருண்ட சொகுசு பஸ்சில் அடுத்த விநாடியே தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். பஸ் கவிழ்ந்ததில் காயம் அடைந்த அவர்கள் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் அவர்களை சுற்றி தீப்பிடித்துக்கொண்டது.
சொகுசு பஸ்சில் கதவு மூடப்பட்டு இருந்ததால் அதை திறக்க இயலாமல் போய்விட்டது. கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு பயணிகள் தப்ப முடியாமல் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் பஸ் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைப்ப தற்கு அவர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடிய பிறகுதான் தீயை அணைக்க முடிந்தது.
அதற்குள் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 33 பயணிகளில் 26 பயணிகள் கருகிய நிலையில் பஸ்சுக்கு உள்ளேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
7 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பஸ் டிரைவரும் காயங்களுடன் உயிர் தப்பி இருந்தார். அவர்கள் அனைவரும் புல்தான மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். டிரைவரிடம் விசாரணை நடத்திய போது தான் டயர் வெடித்து பஸ் தடுப்புகளில் மோதி தீப்பிடித்த விவகாரம் தெரிய வந்தது.
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதிரிச்சி வெளியிட்டார். பஸ் விபத்தில் பலியான 26 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.