இந்தியா

கேரள ஆளுநர் உரை: மாநில வளர்ச்சிக்கு பாராட்டு; மத்திய அரசின் நிதி கட்டுப்பாடுகளுக்கு கண்டனம்

Published On 2026-01-20 12:11 IST   |   Update On 2026-01-20 12:11:00 IST
  • கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
  • ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்

தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையைத் தொடங்கி வாசித்தார். அப்போது, கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேரளா குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகப் பாராட்டினார். வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பத்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் மலையாளத்தை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் உரையில் விளக்கினார். அதே வேளையில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கேரளாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜனவரி 29 அன்று அவையில் தாக்கல் செய்வார்.

Tags:    

Similar News