இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Published On 2022-06-22 11:13 IST   |   Update On 2022-06-22 12:21:00 IST
  • முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
  • தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதுதொடர்பாக ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில் எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது. மேலும் அவர் கோர்ட்டில் கொடுத்த ரகசிய வாக்குமூலம் அறிக்கையை அமலாக்கத்துறை பெற்று உள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக ஸ்வப்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று ஆஜராக உள்ளார். அவரிடம் ஏதேனும் புதிய ஆதாரம் உள்ளதா என்பது குறித்தும் சிவசங்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ள கருத்துகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.

Tags:    

Similar News