இந்தியா

போலீஸ் நிலையத்தில் கோழிக்கறி சமைத்து பரிமாறி ஊட்டி விட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

போலீஸ் நிலையத்தில் கோழிக்கறி சமைத்து பரிமாறிய போலீசார்: விளக்கம் கேட்டு ஐ.ஜி. நோட்டீஸ்

Published On 2023-07-29 02:55 GMT   |   Update On 2023-07-29 02:55 GMT
  • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
  • 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

திருவனந்தபுரம்:

போலீஸ் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை மிக கடுமையாக நடத்தும் மன நிலை, அதிக சத்தம் போட்டு மிரட்டுவது போன்றவற்றை சினிமாவிலும், நேரிலும் பார்த்து இருப்போம். ஆனால் காக்கி சீருடை அணிந்தவர்கள் மனதில் ஜாலியான பல விஷயங்கள் ஒளிந்திருப்பது யாருக்கும் தெரிந்திருக்காது. இந்தநிலையில் கேரளாவில் போலீஸ் நிலையத்திலேயே கோழிக்கறி சமைத்து ஆசையாக பரிமாறிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் இலவம்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் சீருடை அணிந்த நிலையில் கோழிக்கறி குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டனர். அத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.

அந்த வீடியோவில் கடைக்கு சென்று கோழி இறைச்சியை வாங்கியது முதல் வெங்காயம் வெட்டியது, இஞ்சி பூண்டு உரிப்பது, பின்னர் மசாலா போட்டு சமைப்பது, அவற்றை பரிமாறி சாப்பிடுவது போன்றவை பின்னணி பாடலுடன் சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அந்த சாப்பாட்டை அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டதும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்போதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தெற்கு மண்டல ஐ.ஜி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 'போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போலீசார் எப்படி இந்த வேலையை செய்யலாம். இதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய காரணம் என்ன?. இதற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News