இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு: சந்திரசேகர ராவ் மகளுக்கு 15-ந்தேதி வரை சி.பி.ஐ. காவல்

Published On 2024-04-13 04:10 GMT   |   Update On 2024-04-13 04:10 GMT
  • கவிதா கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா (வயது 46), கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன்படி திகார் சிறைக்கு சென்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை 15-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என கவிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா குற்றம் சாட்டினார்.

மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கவிதா மீது குற்றச்சதி, கணக்குகளை மறைத்தல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News