சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் விவகாரம்: பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்
- ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
- ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
கோப்பை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட பல்வேறு மூத்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.