இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி - ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயக்கம்
- இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் விமான தளங்கள் அழிக்கப்பட்டன.
- எல்லை அல்லாத மாவட்டங்களான தோடா, கிஷ்த்வார், ரியாசி மற்றும் ராம்பன் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
தேசத்தையே கொந்தளிக்க வைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டது. பல்வேறு வகை விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய படைகள் தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
இதைத்தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி நள்ளிரவு இந்திய படைகள் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்தன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர கிராமங்களில் பீரங்கி தாக்குதல் நடத்தியது. அதில் அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.
இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதனால் பாகிஸ்தான் பணிந்தது. அந்நாடு கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 10-ந் தேதி, இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்த நிலையில் ஜம்முவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு பிரிவு ஆணையர் கூறுகையில்,
ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ச்சியான பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன.
எல்லை அல்லாத மாவட்டங்களான தோடா, கிஷ்த்வார், ரியாசி மற்றும் ராம்பன் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கதுவா, ஜம்மு, ரஜோரி, பூஞ்ச், சம்பா மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களும் மூடப்படும். நிலைமையை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய பதற்றங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.