இந்தியா

அமித்ஷாவுடன் இன்று ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு- பா.ஜனதா கூட்டணிக்கு முயற்சி

Published On 2024-02-09 12:15 IST   |   Update On 2024-02-09 12:15:00 IST
  • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
  • மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அதற்காக தயாராகி வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பாராளுமன்றத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி சென்றார். அவரை ஆந்திர எம்.பி.க்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திதது பேசுகிறார். தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணத்துக்கு மறுநாளே ஜெகன்மோகன் ரெட்டியும் அங்கு சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றுவதில் அவரது கட்சி ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News