இந்தியா

தெலுங்கானா அமைச்சர் வீட்டில் நவீன ஸ்கேனர் மூலம் சோதனை- வருமான வரித்துறையினர் மீது போலீசில் புகார்

Published On 2022-11-24 10:53 IST   |   Update On 2022-11-24 10:53:00 IST
  • வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
  • பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின் பெயரில் 300 வங்கி கணக்குகளும், 80 லாக்கர்கள் உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ராஜசேகர ரெட்டி மற்றும் அவரது மனைவி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளதால் அவர்களின் 2 வங்கி லாக்கர்கள் நேற்று திறக்கப்பட்டு சோதனை செய்தனர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் அவர்கள் இன்று ஐதராபாத் வந்த பின்னர் மீதம் உள்ள 78 லாக்கர்களை திறந்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும் மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர்களை வைத்து எந்தெந்த அறையில் நகை, பணம், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என சோதனை செய்தனர்.

வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இருப்பினும் பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பிரவீன் ரெட்டி வீட்டில் ரூ.1.50 கோடி, திருச்சூல் ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, ரகுநாத ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, சுதிர் ரெட்டி வீட்டில் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.50 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தனது வீட்டில் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மகன் மகேந்தர் ரெட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக போயன பள்ளி போலீசில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் மல்லா ரெட்டி புகார் செய்தார்.

அவரது புகாரை ஏற்ற போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மேரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News