இந்தியா

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தடை தொடரும்: இந்தியா

Published On 2025-05-22 19:51 IST   |   Update On 2025-05-22 19:51:00 IST
  • பஹல்காம் பயங்கரவா தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  • எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என இந்தியா திட்டவட்டம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இந்தியாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்தது. பாகிஸ்தான் உடனான அனைத்து வகையிலான இருதரப்பு உறவுகளையும் இந்தியா ரத்து செய்தது.

குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. தண்ணீரும், ரத்தமும் இணைந்து பாய முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தானின் சிந்து உள்ளிட்ட பிராந்தியங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் என பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், இந்த நிலையில் "தண்ணீரும் இரத்தமும்" ஒன்றாகப் பாய முடியாது என்பதால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம், நிறுத்தப்படும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

அத்துடன் பாகிஸ்தானுடன் எந்தவொரு இருதரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அது பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதியை குறித்தது மட்டுமாகவே இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உதவுவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவது குறித்த கேள்விக்கு "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருதரப்பு ரீதியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள். பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்லாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News