எதுக்கு சொல்றேன்னா.. அதுக்கு சொல்றேன்.. 'வாரம் 70 மணி நேரம் வேலை' ஏன் என நாராயண மூர்த்தி விளக்கம்
- ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
- இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள்
ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.
நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க நாராயண மூர்த்தி வழி சொல்கிறார் என்று இணையவாசிகளும் ஐடி ஊழியர்களும் புலம்பித் தள்ளினர்.
இந்நிலையில் தனது 70 மணி நேர ஐடியாவுக்கு நாராயண மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை முதல் இடத்திற்கு உயர்ந்த நமது இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.