இந்தியா

'நீதிக்காக இன்னும் காத்திருக்கிறேன்' - உன்னாவ் பாலியல் குற்றவாளி குல்தீப் செங்கார் மகள் திறந்த கடிதம்

Published On 2025-12-29 21:59 IST   |   Update On 2025-12-29 21:59:00 IST
  • உண்மைக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.
  • அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இஷிதா செங்கார், 'கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது குடும்பம் அமைதியாகச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கை மெல்லத் தேய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

"இந்தியக் குடியரசின் மாண்புமிகு அதிகாரிகளுக்கு,

களைப்படைந்த, அச்சமடைந்த மற்றும் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து வரும் ஒரு மகளாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனாலும், செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் இன்னும் நம்பிக்கையை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எட்டு ஆண்டுகளாக, நானும் என் குடும்பமும் காத்திருந்தோம், அமைதியாக. பொறுமையாக. 'சரியான வழியில்' அனைத்தையும் செய்தால், உண்மை இறுதியில் தானாகவே வெளிப்படும் என்று நம்பினோம்.

நாங்கள் சட்டத்தை நம்பினோம். அரசியலமைப்பை நம்பினோம். இந்த நாட்டின் நீதி என்பது சத்தம் போடுவதிலோ, ஹேஷ்டேக்குகளிலோ (hashtags) அல்லது பொதுமக்களின் கோபத்திலோ இல்லை என்று நம்பினோம். இன்று, அந்த நம்பிக்கை சிதைந்து வருவதால் நான் இதை எழுதுகிறேன்.

எனது வார்த்தை கேட்கப்படுவதற்கு முன்பே, எனது அடையாளம் ஒரு முத்திரைக்குள் சுருக்கப்படுகிறது, 'ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் மகள்' என்று. என்னை ஒருமுறைகூட பார்த்திடாத, ஒரு ஆவணத்தையும் படிக்காத, ஒரு நீதிமன்றப் பதிவைக்கூடப் பார்க்காதவர்கள், என் வாழ்க்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். 

இத்தனை ஆண்டுகளில் சமூக வலைதளங்களில், உயிருடன் இருப்பதற்காகவே நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முறை சொல்லப்பட்டிருக்கிறேன். இந்த வெறுப்பு வெறும் கற்பனையல்ல. இது தினசரி நடப்பது. இடைவிடாதது. நீங்கள் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள் என்பதை உணரும்போது, அது உங்களுக்குள் இருக்கும் எதையோ ஒன்றை உடைத்துவிடுகிறது. 

நாங்கள் அமைதியாக இருந்தோம். காரணம் எங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக நம் அமைப்புகளின் மீது (Institutions) நம்பிக்கை வைத்திருந்ததால். நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கத்தவில்லை. உருவ பொம்மைகளை எரிக்கவில்லை அல்லது ஹேஷ்டேக்குகளை (Hashtags) டிரெண்ட் செய்யவில்லை. நாங்கள் காத்திருந்தோம், ஏனெனில் உண்மைக்கு ஆடம்பரம்/ஆர்ப்பாட்டம்  தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.

அந்த மௌனத்திற்கு நாம் கொடுத்த விலை என்ன?

எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், கேலி செய்யப்பட்டும், மனிதத்தன்மையற்ற முறையிலும் நடத்தப்பட்டு, நமது கண்ணியம் சிறுகச் சிறுகப் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு ஓடியும், கடிதங்கள் எழுதியும், தொலைபேசி அழைப்புகளைச் செய்தும், எங்களைக் கேளுங்கள் என்று கெஞ்சியும்,  நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைந்துவிட்டோம். நாம் தட்டாத கதவுகளே இல்லை. நாம் அணுகாத அதிகாரிகளே இல்லை. நாம் கடிதம் எழுதாத ஊடக நிறுவனங்களே இல்லை.

இருப்பினும் யாரும் கேட்கவில்லை.

அதற்குக் காரணம் உண்மைகள் பலவீனமாக இருந்ததல்ல. ஆதாரங்கள் பற்றாக்குறையாக இருந்ததும் அல்ல. மாறாக, எங்கள் உண்மை அவர்களுக்கு இடையூறாக இருந்தது என்பதே காரணம். மக்கள் எங்களை 'அதிகாரம் படைத்தவர்கள்' என்கிறார்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு குடும்பத்தை எட்டு ஆண்டுகளாகப் குரலற்றதாக ஆக்கும் சக்தி (மௌனமாக்கி) என்ன வகையான அதிகாரம்? உங்கள்பேரில் நாள்தோறும் சேற்றை வாரி இறைப்பதைக் கண்டும், உங்களைக் கண்டுகொள்ளாத ஒரு அமைப்பை (system) நம்பி நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பது என்ன வகையான அதிகாரம்?

இன்று என்னை அச்சுறுத்துவது அநீதி மட்டுமல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள 'பயம்' தான் என்னை அச்சுறுத்துகிறது.

நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவரும் மௌனத்திற்குள் தள்ளப்படும் அளவுக்கு உரத்த ஒரு பயம். எவரும் நமக்கு ஆதரவாக நிற்கவோ, நாம் சொல்வதைக் கேட்கவோ, அல்லது 'உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்ப்போம்' என்று துணிச்சலாகக் கேட்கவோ கூடாது என்பதற்காகவே இந்த பயம் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளைப் பார்ப்பது என்னை ஆழமாக உலுக்கியுள்ளது. ஆத்திரத்தாலும், தவறான தகவல்களாலும் உண்மையை இவ்வளவு எளிதாக மூழ்கடிக்க முடியும் என்றால், என்னைப்போன்ற ஒருவர் எங்கே செல்வது? ஆதாரங்களையும் முறையான சட்ட நடைமுறைகளையும் விட, அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

நான் இந்தக் கடிதத்தை யாரையும் அச்சுறுத்துவதற்காக (மிரட்டுவதற்காக) எழுதவில்லை. நான் இந்தக் கடிதத்தை யாருடைய அனுதாபத்தையும் பெறுவதற்காக எழுதவில்லை. நான் பயந்துபோயிருப்பதாலும், எங்காவது யாராவது ஒருவராவது இதைக் கேட்கும் அளவிற்கு அக்கறை காட்டுவார்கள் என்று நான் இன்னும் நம்புவதால் இதை எழுதுகிறேன்.

நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை. நாங்கள் யார் என்பதற்காகப் பாதுகாப்பையும் கேட்கவில்லை. நாங்கள் மனிதர்கள் என்பதால் நீதியைக் கோருகிறோம்.

சட்டம் அச்சமின்றிப் பேசட்டும். ஆதாரங்கள் எவ்வித அழுத்தமுமின்றி ஆய்வு செய்யப்படட்டும். உண்மை விரும்பத்தகாததாக இருந்தாலும் இருந்தாலும், அது உண்மையாகவே கருதப்படட்டும். இன்னும் இந்த நாட்டை நம்பும் ஒரு மகள் நான். தயவுசெய்து அந்த நம்பிக்கையை நான் இழக்கும்படி செய்துவிடாதீர்கள்.

மரியாதையுடன்,

நீதிக்காக இன்னும் காத்திருக்கும் ஒரு மகள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News