இந்தியா

தாயுடன் நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை ஆகாது: மும்பை கோர்ட்

Published On 2024-02-15 15:50 GMT   |   Update On 2024-02-15 15:50 GMT
  • தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை ஆகாது என மும்பை கோர்ட் கூறியுள்ளது.
  • வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளது என்றார் நீதிபதி.

மும்பை:

மகாராஷ்டிர அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே, பெண்களைப் பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த கோர்ட்டு அவரது மனுவை நிராகரித்தது.

இதனால் அவர் மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில் அவர், எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்தார். அப்போது அவர் தாயின் சிகிச்சைக்காக தொடர்ந்து பணம் அனுப்பினார். அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்தார். இது எனது திருமண வாழ்க்கையில் மோதலுக்கு வழிவகுத்தது என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிஷ் அயாச்சி தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

1993-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில் தான் அவர்களின் திருமணம் முறிந்துள்ளது. திருமண வாழ்க்கையில் கணவர் எதிர்கொண்ட போராட்டங்கள், தற்கொலை முயற்சிகள் போன்ற ஆதாரங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர் அவரது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறார் என்று குறை கூறுவதை குடும்ப வன்முறையாகக் கருதமுடியாது. குடும்ப வன்முறைக்கு ஆளானார் என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார். பெண்ணின் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என முடிவு செய்து இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News