திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- திருப்பதியில் நேற்று 88,257 பேர் தரிசனம் செய்தனர்.
- 45,068 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு விஷ்ணு நிவாசம், ஸ்ரீனிவாசம், அலிபிரி பூதேவி வளாகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச நேர ஒதுக்கீட்டு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. பூதேவி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்களில் தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் காத்திருந்தனர்.
மதியம் 12.30 மணி அளவில் தேவஸ்தான ஊழியர்கள் வளாக நுழைவு வாயில்களை திறந்தனர். அப்போது தரிசன டிக்கெட் வாங்க காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வரிசைக்கு ஓடினர்.
இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில பக்தர்களிடம் கைகலப்பு நடந்தது. இதனால் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பக்தர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்.
தரிசன டிக்கெட் வாங்க எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம். மாலையில் சாமி தரிசனம் செய்ய இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என பக்தர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
எனவே தேவஸ்தான அதிகாரிகள் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களை வரிசைப்படுத்தி தரிசன டிக்கெட் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 88,257 பேர் தரிசனம் செய்தனர். 45,068 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.