இந்தியா

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குஜராத் இளைஞர் கைது

Published On 2025-04-15 11:33 IST   |   Update On 2025-04-15 14:56:00 IST
  • மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
  • அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த  மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை வோர்லி போலீசார் இன்று  கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார். இதனால் ஒரு நோட்டீசுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

Tags:    

Similar News