மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராமில் மம்தா பானர்ஜி சாலையோர கடையில் வடை சுட்டுக்கொடுத்த காட்சி.
ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்துவோம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
- ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
- நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கூட்டத்தில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தந்து விடும் என்று நினைத்தோம். ஆனால், எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை மத்திய அரசு வழங்கவில்லை.
மாநிலங்களுக்கு பங்கு வழங்க முடியாவிட்டால், ஜி.எஸ்.டி. முறையையே மத்திய அரசு கைவிட்டு விடலாம். இது ஒன்றும் பா.ஜனதா பணம் அல்ல. மக்கள் பணம். அதை ஜி.எஸ்.டி. மூலமாக மத்திய அரசு பறித்துக்கொள்கிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் காலை தொட்டு நான் பணம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாக்கி தொகையை கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்.
மேலும், மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூலை செலுத்துவதை நிறுத்த வேண்டி இருக்கும்.
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிப்பது இல்லை. நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை. நிதி பெறுவதற்கான மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மம்தா பானர்ஜி, அப்பகுதி மக்களுடன் உரையாடினார். மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.
அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், மம்தா பானர்ஜி வடை சுட்டு கொடுத்தார்.