இந்தியா

மரண தண்டனையும் ஏற்க தயார்... ஏன் கூறினார் பாபா ராம்தேவ்?

Published On 2023-11-22 12:57 GMT   |   Update On 2023-11-22 12:57 GMT
  • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
  • சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி:

ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அலோபதி மருந்துகளைக் குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

Tags:    

Similar News