இந்தியா
null

கணவரை பார்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இடைத்தரகருக்கு ரூ.1 கோடி கொடுத்த பஞ்சாப் பெண்

Published On 2025-02-07 14:10 IST   |   Update On 2025-02-07 14:11:00 IST
  • மெக்சிகோவை ஆபத்தான வழியில் கடந்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
  • விமானத்தில் எல்சல்வடார் சென்று அங்கிருந்து குவாத்தமாலாவுக்கு ஆபத்தான முறையில் நடந்தே சென்றோம்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதில் பஞ்சாப்பை சேர்ந்த பெண்ணும் ஒருவர். அவரது பெயர் லவ் பிரீத் கவுர் (வயது30) பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் போலாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக லவ்பிரீத் கவுர் முடிவு செய்தார். இதற்காக இடைத்தரகர் ஒருவர் மூலம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி தனது 10 வயது மகனுடன் சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றார்.

இதையடுத்து அவர் மகனுடன் அமெரிக்கா சென்ற 25 நாட்களுக்குள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் லவ் பிரீத் கவுர் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது.

எங்களை அமெரிக்காவுக்கு நேரடியாக அழைத்து செல்வதாக இடைத்தரகர் ஒருவர் தெரிவித்தார். இதை நம்பி நாங்கள் அவரிடம் ரூ. 1 கோடி கொடுத்தோம். எனது கணவர் பணம் அனுப்பி இருந்தார். மேலும் விவசாய நிலத்தை குடும்பத்தினர் அடமானம் வைத்து இந்த பணத்தை திரட்டி கொடுத்தோம்.

இடைத்தரகர் சொன்னபடி நானும், எனது மகனும் அமெரிக்காவுக்கு புறப்பட்டோம். முதலில் நாங்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றோம். அப்போது எல்லையில் இருந்த அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் விமானம் மூலம் கொலம்பியா அழைத்து செல்லப்பட்டோம். அங்கு 2 வாரங்கள் தங்க வைக்கப்பட்டோம். அதன் பிறகு விமானத்தில் எல்சல்வடார் சென்று அங்கிருந்து குவாத்தமாலாவுக்கு ஆபத்தான முறையில் நடந்தே சென்றோம்.

அமெரிக்கா சென்ற போது என்னிடம் சிம்கார்டு, காதணிகள், மற்றும் வளையல் போன்ற சிறிய ஆபரணங்களை கூட அதிகாரிகள் கழற்ற சொன்னார்கள்.

5 நாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம். எங்களை இடுப்பில் இருந்து கால்கள் வரை சங்கிலியால் கட்டி வைத்து இருந்தனர். கைகளில் விலங்கு போட்டனர். பின்னர் எங்களை எங்கு அழைத்து செல்கிறோம் என எதையும் சொல்லாமல் விமானத்தில் ஏற்றி விட்டனர்.

இறுதியாக இந்தியாவுக்கு வந்து இறங்கிய போது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இந்தியா வந்து விட்டதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அறிவித்தனர். இதை கேட்டு என் கனவுகள் எல்லாம் ஒரே நொடியில் நொறுங்கி போனது போல உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

லவ் பிரீத் கவுர் போல அரியானா மாநிலம் கர்னாலை சேர்ந்த 20 வயது ஆகாஷ் என்பவர் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல ரூ. 72 லட்சம் செலவழித்ததாக கூறி உள்ளார். மெக்சிகோவை ஆபத்தான வழியில் கடந்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News