இந்தியா

மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி

Published On 2025-04-24 22:27 IST   |   Update On 2025-04-24 22:27:00 IST
  • பஹல்காம் தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News