முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல் நல்லடக்கம் - கார்கே நேரில் அஞ்சலி
- தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
- மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், நேற்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.
தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.
1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். இன்று, சிவராஜ் பாட்டீலின் உடல் அவரது சொந்த ஊரான வர்வந்தி கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வர்வந்தி கிராமத்தில் அவருக்கு சொந்தமான பண்ணையில் சிவராஜ் பாட்டீலின் உடல் அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சாவன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.